Feature Top (Full Width)

Saturday, November 15, 2014

புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக குழந்தைகள் திரைப்பட விழா - நவம்பர் 10 முதல் 16 வரை நடைபெறுகிறது.

புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக குழந்தைகள் திரைப்பட விழா -  நவம்பர் 10 முதல் 16 வரை நடைபெறுகிறது. 

 








 
புன்செய் புளியம்பட்டி நவம்பர் 9:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள் திரைப்பட விழா  நவம்பர் 10 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைக்கு திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். பேச்சு மொழியை காட்டிலும் காட்சி மொழி எளிதில் மனதில் பதியும். அந்த வகையில்  குழந்தைகளிடம் அன்பு, அஹிம்சை, மனிதநேயம், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஆஸ்கார் விருது மற்றும்  உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற சிறந்த குழந்தைகள் திரைப்படங்களும், தமிழில் வெளியாகியுள்ள குழந்தைகளுக்கான குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள 20 இக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியில் ஒரு படம் வீதம் 7 நாட்கள் படங்கள்  திரையிடப்படும். 
குழந்தைகள் திரைப்பட விழா சில்ரன்ஸ் ஆப் யெவன் (chilrens of heavan), கலர் ஆப் பேரடைஸ் (color of paradise), ரெட் பலூன் (red balloon), தி சாங் ஆப் ஸ்பெரோஸ் (the song of sparrows), life of pie ஆகிய ஆங்கில திரைப்படங்களும், காந்தி, பாரதி, காமராஜர், சுவாமி விவேகானந்தர், பூங்கா, பூக்குட்டி, இப்படிக்கு பேராண்டி, கை, பாலிபேட்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிட பட உள்ளன.

நிறைவு விழா 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் புன்செய் புளியம்பட்டி சிந்தாமணி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. 15 ஆம் தேடி  காலை 10 மணிக்கு காந்தி  திரைப்படமும், மாலை 6 மணிக்கு பாரதி திரைப்படமும், 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு காமராஜர் திரைப்படமும், மாலை 6 மணிக்கு சுவாமி விவேகானந்தர் திரைப்படமும் திரையிட படுகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொள்ளலாம்.  மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புன்செய் புளியம்பட்டி அருகிலுள்ள காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.

புன்செய் புளியம்பட்டி அருகிலுள்ள காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.

- தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள்








புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள காவிலிபாளையத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலா தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு அருகில் காவிலிபாளையம்  ஊராட்சி உள்ளது. இங்கு 1500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது.
வகுத்துகவுண்டன் புதூர், தென்னமாங்குளம், செல்லம்பாளையம், காராபாடி, கண்டிசாலை, கோப்பம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணை மற்றும் சிறிய குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர்கள் கடைசியில் காவிலிபாளையம் குளத்தை சென்று அடைகிறது. அதே போல் புன்செய் புளியம்பட்டி செட்டிகுட்டை, வெங்கநாயகன்பாளையம் குளம், நல்லூர் குளம், புங்கபள்ளி குளம் ஆகியவற்றின் உபரி நீரும் காவிலிபாளையம் குளத்தை வந்தடைகிறது. எனவே இந்த குளத்தில் ஆண்டு முழுமையும் நீர் உள்ளது. மேலும் காவிலிபாளையம் குளத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரினால் உபரி நீர் வீணாகாமல் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக வந்தடையும்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 14 பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த 14 சரணாலயங்களை காட்டிலும் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் மிகவும் பெரிது. ஈரோட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 0.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதைவிட மிகவும் அதிக அளவில் 500 ஏக்கர் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் அமைந்துள்ளது. இதில் ஏராளமான பறவைகள் உள்ளன. அவ்வபோது பிற இடங்களில் இருந்தும் பறவைகள் வருகின்றன. காவிலிபாளையம் குளத்துக்கு அருகிலேய சிறிய மலைக்குன்று ஒன்று உள்ளது. இங்கு இருந்து பார்த்தால் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக பார்வை இடலாம்.
மேலும் குளத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளது. பறவைகள் உண்ணக்கூடிய பழ மரங்களை அதிகளவில் நட்டால் இன்னும் அதிக பறவைகள் இங்கு வரக்கூடும். இங்கு தற்போது கொக்கு, நாரை, நீர்காகம் உள்பட பல்வேறு பறவைகள் உள்ளது. அதிக பரப்பளவு, ஆண்டு முழுவதும் நீர், சுற்றிலும் சிறிய மரங்கள், அருகிலேயே மலைகுன்று என பறவைகள் சரணாலயம் அமைக்க அனைத்து வசதிகளையும் காவிலிபாளையம் குளம் இயற்கையாகவே பெற்றுள்ளது. பறவைகளுக்கான வாழ்வாதாரம், உணவு தரும் பழ மரங்கள் என சில வசதிகளை செய்தால் ஆண்டு முழுவதும் பறவைகள் இங்கே வருகை தர ஆரம்பிக்கும்.
மேலும் இங்கு படகுகள் மூலம் சுற்றுபயணம் செய்து பறவைகளை காணவும் வசதி ஏற்படுத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்குமிடம், வழிகாட்டி, தொலைநோக்கி, வாகன வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினால் இந்த பகுதி மிகசிறந்த சுற்றுலா தலமாக மாறும். இதன் மூலம் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன்பெறுவார்கள். ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வண்ணங்களின் உலகம் பூக்கள் என்றால் வண்ணங்களோடு சேர்த்து இனிமையான குரலையும் கொண்டது பறவைகளின் உலகம். இன்று உலகில் 1300 இகும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அழகழகான பறவைகளை இயற்கை சூழ்நிலையில் கண்டு மகிழ்வது அனைவருக்கும் பிடிக்கும். பறவையை கண்டான். விமானம் படைத்தான் என்பார்கள். புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக பறவைகள் திகழ்கின்றன. கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை கண்டு ரசிப்பது பரவசமான அனுபவம். ‘இந்தியப் பறவையியலின் தந்தை' என அழைக்கப்படும் சாலிம் அலி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய பறவைகள் தினமாக கொண்டாடபடுகிறது. இத்தருணத்தில் தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழக அரசு, வனத்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்து காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.